முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடத்தில் இன்று பிரதமர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
“கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. விண்வெளித்துறை, விளையாட்டுத்துறையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத் தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 60 ஆண்டுகளாக அதள பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் உயர்ந்துள்ளது.
கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் உலகளவில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் வந்தது. 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.
கொரோனா காலத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறியபோது இந்தியா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தது. தமிழ்நாடு முழுவதும் மோடியின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் இடத்தில் இன்று மோடி இருக்கிறார்.
தேதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டத்தையும் பெற்றுத் தருவார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் கிடைத்ததுபோல, இந்த முறையும் தேவையான திட்டங்களை உறுதியாக பெற்றுத் தருவோம்.
திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? திமுகவின் பொய் பரப்புரைகளை நம்பி ஏமாற வேண்டாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் கொடுக்கும் வெற்றி, 2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட வழிவகை செய்யும். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் விரோத ஆட்சியை ஒழித்து, துரோகிகளையும் ஓரம்கட்டி உண்மையான மக்களாட்சியை உருவாக்குவதற்கு தேசிய ஜனநாய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.”
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.