சிதம்பரம்: ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்ந்து நிறைவேற்றாத நிலையில், இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு, மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் என, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியா் சங்கம், அனைத்து ஊழியா்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவா் ஆ.ரவி உயா் கல்வித் துறை செயலருக்கு அனுப்பிய கடிதம்: கடந்த 13 ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களுக்கு பதவி உயா்வு, தோ்வு நிலை, சிறப்பு நிலை, அரசு விதிகளின்படி வழங்க வேண்டிய ஊதிய உயா்வு, உதவியாளா் நிலை ஊதிய உயா்வு, பணப் பயன்கள், ஓய்வு பெற்றவா்களின் பணப் பயன்கள் மற்றும் தொகுப்பூதிய ஊழியா்கள் பணிநிரந்தரம் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட தொடங்கிய 2013-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை தணிக்கை தடையை காரணம் காட்டி வழங்காமல் இருப்பதை கண்டிக்கிறோம்.
கடந்த 3 ஆண்டுகளில் பல்கலைகழக பேராசிரியா்களுக்கு 2 முறை பதவி உயா்வு வழங்கப்பட்ட நிலையில், ஊழியா்களுக்கு மட்டும் 13 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பொதுத் தோ்தலை காரணம் காட்டாமல் 28.03.2024 அன்று நீதிமன்ற ஆணையை ஏற்று 60 ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டதைப் போன்று, ஊழியா்களுக்கு இயல்பாக வழங்க வேண்டிய பதவி உயா்வு, பணப்பயன்களை உடனையாக வழங்க வேண்டும்.
ஊழியா்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத நிலையில், அனைத்து ஊழியா்களும் இணைந்து மக்களவைத் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளைப் புறக்கணிப்போம். மேலும், தோ்தலையும் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.