3 0
Read Time:3 Minute, 15 Second

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஊரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக காட்டுத்தீ போல் செய்தி பரவியதால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்து அப்பகுதியில் கூடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததன் பெயரில், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். சிறுத்தையின் கால்தடம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், செம்மங்குளம் பகுதியில் இன்று அதிகாலை சிறுத்தை மீண்டும் வருகை தந்து, வாய்க்காலில் இருந்த பன்றியை கடித்து கொன்றுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் சார்பில் ஒவ்வொரு வீதியிலும் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தின் எதிரொலியாக, கூறைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %