0 0
Read Time:5 Minute, 54 Second

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அதிகபட்ச வெப்பநிலை :

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், வேலூரில் 41.9° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், திருச்சியில் 41.3° செல்சியஸ், சேலம் & திருத்தணியில் 41.2° செல்சியஸ், மதுரையில் (நகரம்) & தர்மபுரியில் 41.0° செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் (ஏப். 20) முதல் 23 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப். 24 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–39° செல்சியஸ் இருக்கக்கூடும். ஏப்.21 முதல் 24 வரை, அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

ஏப்.20 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஏப். 20 ஆம் தேதி கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %