தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இறுதி வாக்கு சதவிகித பட்டியலையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு சில வாக்குச் சாவடிகள் மக்கள் நீண்ட வரிசையாலும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் இரவு 9மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்கு சதவிகிதம் குறித்த அறிவிப்பு வாக்குப்பதிவு அன்று 72.09% என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவின் முழு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது அதன்படி 69.46% வாக்குகள் பதிவானதாக தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி 10% வாக்கு சதவிகிதம் அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும் ஏன் இந்த குளறுபடி எனவும் அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பினர்.
இந்த நிலையில் ஏப்ரல் 21ம் தேதி பகல் 12மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த முறை பதிவான வாக்குகளை விட ஒட்டுமொத்த சென்னையில் வாக்கு பதிவானது குறைந்துள்ளது.