புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலப்பது, குடிநீரில் சாணம் கலப்பது, பள்ளி மாணவர்களிடையே சாதி சண்டை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வெள்ளனூர் காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடைபெற்றகு வருகிறது.
அதுபோல, சாதி பிரச்சினை காரணமாக கடையில் குழந்தைகளுக்கு பொருட்களை விற்க மறுத்து, அதை வீடியோவாக வலைதளத்தில் பரப்பிய கடைக்காரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.’ நாங்குநேரியில் ஒரு தலித் மாணவன் தனக்கு சக மாணவர்களால் சாதி ரீதியாக இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்ததால், தலித் மாணவனையும் அவன் தங்கையையும் அந்த மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமைச்சர் பொன்முடி, அரசு விழா மேடையில் வைத்து நீங்கள் ‘எஸ். சி’ தானே என ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை பார்த்து அமைச்சர் பொன்முடி கேட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.இதுபோன்ற பல சம்பவங்களில் தமிழ்நாடு காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், சாதிய வன்முறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. இது தமிழ்நாட்டின் அவலமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் உள்ள மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.