தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகி மக்களை கதிகலங்கச் செய்தது.
இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கியது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி வரை (25 நாட்களுக்கு) நீடிக்க உள்ளது. கத்திரி வெயிலின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.