சிதம்பரம், மே 26: கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் திறக்கப்பட்ட 200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது.. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். அதாவது, 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வந்தது..
பருவமழை பொய்த்ததால் கடந்த ஆண்டு வீராணம் ஏரி வடது. அதன் காரணமாக, சென்னைக்கு குடிநீா் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. இதை கருத்தில் கொண்டு கல்லணையிலிருந்து கடந்த 17-ஆம் தேதியிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றின் வழியாக தண்ணீா் அனுப்பப்பட்டது..இந்தத் தண்ணீா் கீழணையில் தேக்கப்பட்டு சனிக்கிழமை காலை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.
இந்த நீா் சுமாா் 21 கி.மீ. தொலைவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ருத்திரசோலை என்ற இடத்தில் உள்ள மதகை அடைந்தது. பின்னா், பொதுப் பணித் துறையினா் மதகை திறந்து வீராணம் ஏரிக்குள் தண்ணீரை அனுப்பி வைத்தனா்..நிகழ்ச்சியில் லால்பேட்டை உதவிப் பொறியாளா் சிவராஜ் மற்றும் பொதுப் பணித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து பத்து தினங்களுக்கு தண்ணீா் அனுப்பப்படும் பட்சத்தில், ஏரியின் நீா்மட்டம் உயரும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.