மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பூம்புகாரில் தற்போது ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.
கடற்கரை துறைமுகமாக விளங்கிய இந்த பூம்புகாரின் வணிக முக்கியத்துவம் அறிந்து பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கான குடியேற்றங்களும் காவேரிபட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
அந்தவகையில் பூம்புகார் நகரம் இன்றும் ஒரு வரலாற்று தலமாக முக்கியத்துவம் பெற்று வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் நகரம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் பூம்புகார் நகரமும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பருவத்தில் இந்த நகருக்கு சுற்றுலா மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். தற்போது இந்த பூம்புகார் புதுப்பிக்கப்படுவது சுற்றுலா பயணிகளுக்கிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஆணையிட்டு தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சிலப்பதிகார கலைக்கூடம், தகவல் விளக்க கூடம், உணவகம், கடைகள், இலஞ்சி மன்றம் மேம்பாடு, குடிநீர் தொட்டி, கண்ணகி சிலை போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.