10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதால் டிடிஎஃப் வாசனை மதுரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த வருடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 ஆண்டுக்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சிறைக்கு சென்று திரும்பிய பிரபல யூடியூபர் டிடி எஃப் வாசன் சென்னை அயப்பாக்கத்தில் இருச்சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் பிரதமர் அலுவலகத்தில் புகார் சென்றிருந்தது.
அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக உத்தரவின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜி பரந்தாமன் தலைமையில் அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள டிடி எஃப் வாசன் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு விலை உயர்ந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்களை விற்பனை தடை விதித்து போக்குவரத்து காவல் துறையினர், யூடியூபர் டிடி எஃப் வாசனுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் மதுரையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக அவர் மீது அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎப் வாசனை போலீஸார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.