கொரோனா தடுப்பு நடவடிக்கை.. வெளிப்படையாக செயல்படுகிறோம் -முதலமைச்சர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு தேவையான தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்ட 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரும் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், கூடுதல் எண்ணிக்கையிலான படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.