கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று காலை வரையில் 29 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், 11 மணி நிலவரப்படி 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது வரை 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக திடீர் சோதனை நடத்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சாராயம் விற்பவர்கள் பற்றி பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.