முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. கையாளாகாத மத்திய தேர்வு முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டுவர வேண்டும். தொழில்முறை தேர்வுமுறையில் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வி தேர்வுமுறையில் மாநில உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.