மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று (ஜூன் 26) தேர்தல் நடைபெற்றது.
இதுவரை, மக்களவை சபாநாயகரை தேர்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 25) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். இதில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவதென ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது. எனவே, மக்களவை தலைவர் பதவிக்கு இரு தரப்பிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 18வது மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை கனிமொழி மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
இதையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களும் சுரேஷை மக்களவைத் தலைவராக்க வழிமொழிந்தனர். தொடர்ந்து, மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பை மக்களவை இடைக்காலத் சபாநாயகர் நடத்தினார். இதில், மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்து சென்று அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து அமர வைத்தனர்.
ஓம் பிர்லா:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிர்லா மாணவ பருவத்திலேயே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோட்டா மாவட்ட பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி தலைவராகவும், பின்னர் அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஓம் பிர்லா. 1997 முதல் 2003-ம் ஆண்டு வரை பாஜகவின் இளைஞர் அணி தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஓம் பிர்லா, முதல் முறையாக கோட்டா தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.
தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஓம் பிர்லா கடந்த 2019-ம் ஆண்டு கோட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார் ஓம் பிர்லா.
17வது மக்களவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அந்த பதவிக்கு வந்த முதல் எம்.பி., என்ற பெருமையையும் பெற்றார்.
ஓம் பிர்லா அப்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், மக்களவையில் சபாநாயகருக்கான பணியை சிறப்பாக செய்து பாராட்டுதலை பெற்றார். இதனை மனதில் கொண்டே 18வது மக்களவைக்கும் அவரையே சபாநாயகராக்க முடிவு செய்தது பாஜக.