கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பலர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். அதில் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை ஜூன் 20ம் தேதி கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமயில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.