மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார்.
நெஞ்சுவலி: இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார் கலெக்டர் மகாபாரதி. காலையிலிருந்து நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதியம் முகாம் அலுவலகத்துக்கு சென்றார்.. அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் மற்றும் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. எனவே, மறுநாளே அதாவது ஜூன் 27-ம் தேதியே கலெக்டருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது.
மகாபாரதி: சிகிச்சை முடிந்த நிலையில், இன்று ஜூலை 1ம் தேதி காலை மயிலாடுதுறைக்கு திரும்பினார் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.. ஆனால், வீட்டில் ஓய்வு எதுவும் எடுக்காமல், காலையிலேயே கிளம்பி கலெக்டர் ஆபீசுக்கு வந்துவிட்டார்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
பிறகு, அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் மகாபாரதி, “உங்கள் அனைவரது பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.. சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய நாளன்றே, பணியில் சேர்ந்து பணியாற்றிய சம்பவம், மாவட்ட மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
அறுவடை: கடந்த வருடம் பிப்ரவரி மாதமும் இப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. அப்போது பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மொத்தமாக நீரில் மூழ்கிவிட்டன.
இதனால் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்காத, கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய 8 கிராம மக்களும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு தந்தார்கள். அதுவரை அம்மனுக்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அப்போதுதான் கலெக்டராக பொறுப்பேற்றிருந்த மகாபாரதியிடம் மனு தந்தனர்.
நிவாரணம்: உடனே, 8 கிராம விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டரும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.. இதையடுத்து விடுபட்டு போன விவசாயிகளுக்கு 5 கோடி 86 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், கலெக்டருக்கு தங்கள் நன்றியை வித்தியாசமாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசையுடன் ஊர்வலமாக சென்றார்கள்.
அப்போது கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கையில் மாலைகளும், முகத்தில் மலர்ச்சியுமாக வந்துநின்ற விவசாயிகளை பார்த்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெகிழ்ந்து போனார்..
கேடயங்கள்: ஆட்சியருக்கு கேடயங்களையும், சால்வைகளையும் அணிவித்த விவசாயிகள், தங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்று பூரித்து சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினர்..
இதில் ஹைலைட் என்னவென்றால், வெள்ள நிவாரண நிதியாக, ரூ.10 ஆயிரம் ரூபாயை, அந்த 8 கிராம விவசாயிகளும் ஒன்றாக சேர்ந்து மாவட்ட கலெக்டரிடம் வழங்கிவிட்டு போனார்கள்…!!