தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில், 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுமதி ஐஏஎஸ் பள்ளி கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயாலாளராக இருந்த அமுதாவிற்கு பதில் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர் ஷரவண்குமார் ஜடாவத் தற்போது நகர்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும், நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி, கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில் குமார்ரு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் காலோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.