: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறிய நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணி குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஓய்வு பெற்ற மருந்தாளுநர். நெல்லிக்குப்பத்தில் ஒரு சர்க்கரை ஆலை மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மறைந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி கமலேஸ்வரி. மகன்கள் சுரேந்திரகுமார், சுமந்த் குமார்.
கடலூர் அருகே: இதில் சுரேந்திரகுமார் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் சுமந்த் குமார் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மகன் இஷாந்த், தனது பாட்டியுடன் வசித்து, கடலூரில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமந்த்குமார் காராமணிக்குப்பம் வந்து தங்கி இருந்த நிலையில் தான் ஜூலை 15ஆம் தேதியன்று சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 3 பேர் கருகிய நிலையில்: இதையடுத்து அங்கு வந்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமந்த் குமார், அவரது மகன் மற்றும் தாய் கமலேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒவ்வொரு அறையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக் கிடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் எரித்துக் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர்கள் வீட்டு டிரைவர், பால் கொடுப்பவர், வீட்டு வேலை செய்யும் பெண் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். துப்பு கிடைக்கவில்லை: எனினும், போலீசாருக்கு எந்தவொரு பிடியும் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் சிக்கவில்லை. நெல்லிக்குப்பத்தில் மூவர் கொலை தொடர்பாக, போலீசாருக்கு இதுவரையில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் கைப்பற்றி ஆராய்ந்த போது அதில் இருந்த சிம் கார்டுகளை அகற்றியதோடு, அவற்றை யாரோ ஃபார்மேட் செய்து அதில் இருந்த தகவல்களை அழித்துவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் ட்விஸ்ட்: இந்நிலையில், இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டின் சுவர் மற்றும் கழிவறையில் ரத்தக் கறைகள் படிந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்கத்து வீட்டின் கழிவறை மற்றும் சுவரில் உள்ள ரத்த மாதிரிகளையும் இறந்தவர்களின் வீட்டில் கிடைத்த ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை அறிக்கை அடிப்படையில் இந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.