ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை, அவர் எங்கள் கட்சியில் இருந்தவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு வழக்கறிஞர் ஆனந்தன் பேட்டியளித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது, ஆற்காடு சுரேஷ் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர், அவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த விதமான பகையும் இல்லை. இதனை சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது இது போன்ற காரணத்தை காட்டி பெரும் கொலையை ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்தால் அது முடியாது என்று வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சில யூடியூப் மீடியாக்கள் முழுமையான உண்மை தகவல்கள் இல்லாமல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு ரவுடிகள் பின்புலம் இருந்தது என்று சொல்லி கடந்து செல்கிறார்கள். தவறாக சித்தரிக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கிற்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் நண்பராக இருந்தனர். அதனை மையப்படுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் 6 பொய் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். அனைத்திலும் குற்றமற்றவர் என்று விடுதலையானது மட்டுமில்லாமல், அந்த வழக்குகளை பதிவு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று எழுதிய ஒரு பத்திரிகை ஆசிரியர், ரிப்போர்ட்டருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று தந்திருக்கிறோம்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் குற்றமற்றவர், அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை என்று சென்னை காவல்துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. அவருக்கு 2027 வரை துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று கூறிய வழக்கறிஞர் ஆனந்தன், சென்னை உயர்நீதிமன்றம் பார்கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, எழும்பூர் நீதிமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் ஆதரிப்பவர்கள் தான் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள். இந்த தேர்தல்களில் இதற்கு முன் தோல்வியுற்றவர்கள் மீது எங்களுக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது என்று ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையில் ஆரம்பம் முதல் முடிவு வரை முறையாக விசாரணை வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.