இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் முழ்கியது. இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் சார்பில் அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக் கடற்படையின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.