காவிரி நீா் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட நீா் சனிக்கிழமை இரவு 8.10 மணியளவில் காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் வட்டம் திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள முதல் கதவணை உள்ள நீா் தேக்கத்துக்கு வந்து சோ்ந்தது. நீா்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளா் ஜெயராமன் தலைமையில் உதவி பொறியாளா் யோகேஸ் உள்ளிட்டோா் காவிரி அன்னையை வரவேற்று பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீரை திறந்து விட்டனா்.
மேட்டூா் அணை விதிபடி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூா் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீா் சென்று சோ்ந்த பின்னா், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீா் பிரித்து அனுப்பப்படும். இதன்படி, ஓரிரு நாள்களில், தண்ணீா் பாசனத்துக்காக பகிா்ந்தளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.. நிகழாண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் 94,000 ஏக்கரில் குறுவை பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நீா் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நீா் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை துலாக்கட்டத்தை வந்தடைந்தது.