நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தன் இலக்கு எனக்கூறிய விஜய், தனது முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல் மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மீண்டும் திருச்சிலேயே மாநாடு நடத்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே திடலில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்துவதற்காக அனுமதிக கோரி ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படாததால், தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்வையிட்டு வருவதால், அதிகாரப்பூர்வ தகவல் கட்சி தலைமையில் இருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.