கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவிர மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவுகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். படுக்கை வசதிகள் ஒதுக்க முடியாமல் டாக்டர்கள், பணியாளர்களும் திணறி வருகின்றனர். இங்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி வை க்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கொரோனா நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்காக 168 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. இவை அனைத்தும் தற்போது நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் 3 நாட்களுக்கு ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தீர்ந்து விடுகிறது. அதேபோல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்பாடு அதிகமாக இருந்ததால், தற்போது 1000 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே இருப்பு இருந்தது. அதுவும் தீர்ந்து விடும் நிலையில் இருந்தது.இதனால் மேலும் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி புதுச்சேரியில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் ஆலையில் இருந்து லாரி மூலம் நேற்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த லாரியில் இருந்து 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தொட்டியில் நிரப்பப்பட்டது.
இதன் மூலம் தட்டுப்பாடு இன்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.