பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு ஐரோப்பிய நாடான போலந்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்து ரயிலில் 10 மணி நேரம் பயணித்து 23ஆம் தேதி உக்ரைன் சென்றார். பின்னர் தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி.
இந்த நிலையில், அரசு முறைப்பயணமாக புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த 2 நாட்களுக்கு புருனே மற்றும் சிங்கப்பூர் செல்கிறேன். புருனே, சிங்கப்பூர் நாடுகளுடன் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்தியா – புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சிங்கப்பூரில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங், மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். முக்கிய துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.