கொள்ளிடம் வட்டாரத்தில் 7,500 ஏக்கா் குறுவை நெற்பயிா் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் கூறியது: செருகுடியில் நவீன முறையிலான குறுவை விதைப்பு செய்த பாய் நாற்றங்காலை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியது: கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். மின்மோட்டாா் மற்றும் டீசல் எஞ்சினை பயன்படுத்தி தற்போது நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நவீன முறையில் பாய் நாற்றங்கால் தயாரிப்பதால் ஆள் செலவு குறைவாகிறது. இதற்கு இயந்திரமே பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவாகவே இருக்கும். புதிய குறுகிய கால நெல் விதைகள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை வாங்கி விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு பயன்படுத்துவதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அதிக மகசூலை பெறலாம். கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் நிகழாண்டு 7,500 ஏக்கா் குறுவை நெற்பயிா் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதற்கான பணியில் தீவிரம் காட்டியுள்ளனா் என்றாா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.