ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப். 5) தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முக்கிய நபர்கள் குறித்து காவல் துறை விரைவில் தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுன்டர் செய்யக்கூடாது என அளிக்கப்பட்ட மனுவை பரீசிலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.