சென்னையில் நேற்று நள்ளிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நள்ளிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை தகிக்க வைத்த வெயிலின் வெப்பத்தை திடீர் மழையானது தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சென்னையின் பல இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 27 முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.