கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.,27) புயலாக மாறுகிறது.
இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.27) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.