வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா மசூதி, இந்து கோவிலை அகற்றிவிட்டு கட்டப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமா மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் தொல்லியல் துறையினர் நடத்தச்சென்றபோது வன்முறை வெடித்தது. இதில் போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சம்பல் மாவட்டத்தில் வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று சம்பல் செல்வதாக அறிவித்திருந்தனர். அதேவேளையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்குள் வெளிநபர்கள் வர தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி செல்வதாக ராகுல்காந்தி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று டெல்லியில் இருந்து கார் முலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழு சம்பல் புறப்பட்டு சென்றனர். டெல்லி – மீரட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காசிப்பூர் எல்லை பகுதியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியின் வாகனத்தை நூற்றுக்கணக்கான போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பல் பகுதிக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இந்தநிலையில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட பேர் குழுவை மட்டுமாவது செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் போலிசார் அனுமதி வழங்காததால் காசிப்பூர் எல்லையில் பரபரப்பு நிலவுகிறது.