தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் மழை பெய்வது குறைந்து வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.