சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சாய்ந்து விழுந்த கழிவறை தடுப்புக்களை சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்காக தகரஷீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க மறைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆண் பயணிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் தினமும் இக்கழிவறைகளை பயன்படுத்தி சிறுநீர் கழித்து வருகிறார்கள்.
இங்கு முறையான தூய்மைப்படுத்தி தண்ணீர் ஊற்றி இடங்களை சுத்தப்படுத்துவதே கிடையாது என்னும் குற்றச்சாட்டுகள் உள்ளது. இயற்கையாக மழை பெய்கின்ற பொழுது மட்டுமே கழிவறை தூய்மைப்படுத்துவது போல உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்கப்பட்டும் அதனையும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுத்தப்படுத்துவது இல்லாததால் நியமிக்கப்படாத அசாமிகள் அங்கே இருந்து கொண்டு வருவோர் போவரிடம் சிறு தொகையை பெற்றுக்கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை செய்வதை பார்க்க முடிகிறது.
நகராட்சியின் சார்பில் பேருந்து நிலைய கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பலமுறை எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. மேலும் கழிவறைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முழுவதும் சாய்ந்து பல நாட்கள் ஆகியும் கேட்பாரற்று கிடைக்கிறது. அதனால் மறைவிடம் கொண்ட ஒரு கழிப்பறையை மட்டுமே பயன்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக நகராட்சி ஆணையர் பேருந்து நிலையத்தின் முழு பகுதிகளையும் ஆய்வு செய்து கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் தூய்மை செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சிதம்பரம் நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.