மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சி முன்னணியினர் இன்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். திமுக இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினரின் அமைதி பேரணி நடைபெற்றது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் பங்கேற்றனர்.
பின்னர், அண்ணா நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.