மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கொலையானவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அளவில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது மூன்று பேரும் சிறுவனை தாக்கியுள்ளனர். சிறுவனை தாக்கியது ஏன் என்று கேட்பதற்காக ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை ஊர்க்காரர்கள் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு மேற்கூறிய மூன்று பேரும் கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் ஹரிஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கல்லூரி மாணவரும், இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய குற்றவாளியான மூவேந்தனை போலீசார் தேடி வருகிறார்கள். சாராய விற்பனையில் ஈடுபட்ட மேலும் சிலரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.