“சென்னை,மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும்.
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது\” என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “They have to come to the terms of the Indian Constitution\” என்கிறார் மத்திய கல்வி மந்திரி. மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி மந்திரியால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! \”மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது\” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…” என்று தெரிவித்துள்ளார்.