டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 29,809 பேர் தகுதி பெற்றனர். 26 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை செய்யலாம்.
கடந்தாண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் 2 ஏ நிலையிலான 2540 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எதிர்கொண்ட நிலையில், 29,809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வு கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான உத்தேச விடைப்பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், பொது அறிவுத்தாளில் 5 கேள்விகளும், பொது ஆங்கிலத்தில் ஒரு கேள்வியும் நிபுணர் குழுவின் முடிவுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக பொது அறிவுத்தாளில் 4,70, 88,112, 129 ஆகிய கேள்விகளும், ஆங்கிலத்தில் 145 ஆவது கேள்வியும் நிபுணர் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், எந்த திட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் முதலமைச்சரை தாயுமானவர் என மக்கள் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையும் அடங்கும்.
எஞ்சிய கேள்விகளுக்கான விடைகளில் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாக முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரிவான விடை அளிக்கும் வகையிலான குரூப்-2 முதன்மைத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘