தனது 72வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, மு. கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுக-வினர் செய்து வருகின்றனர். வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது பிறந்தநாளில், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர், அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற உள்ளார். கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.