0 0
Read Time:4 Minute, 59 Second

ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?
தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, அதனைக் கண்டித்து 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்பேரில் அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாஜகவின் இந்த செயல்பாட்டை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?

மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? தற்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க. – தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? மத்தியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது.

இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது, இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே மத்திய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வழியில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %