கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கொரோனா சிகிச்சை மையமாகவும் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பின. இதேபோல, அண்ணாமலை பல்கலைக் கழக கோல்டன் ஜூப்ளி விடுதி மையத்திலும் 400-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன், வட்டாட்சியா் ஆனந்த் மற்றும் சுகாதாரத் துறையினா் இணைந்து சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்து வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா். இந்த மையத்தில் 8 மணி நேரத்துக்கு ஒரு மருத்துவா், இரு செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், நோயாளிகளுக்கு உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.