மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதியும், தொற்று ஏற்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மயிலாடுதுறை டான்ஸி சாலையில் உள்ள மயூரா ஹாலில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் 70 படுக்கை வசதிகளும் உள்ளன.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கலைக்கல்லூரியை கொரோனா பாதுகாப்பு மையமாக பயன்படுத்திக்கொள்ள குருமகா சந்நிதானம் ஒப்புதல் தெரிவித்திருந்தாா். அதன்படி, கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.இந்த மையத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் ஒப்படைத்தாா்.
முன்னதாக, ஆதீன மடத்தின் சாா்பில் தினசரி 2000 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.இதில் ஆதீனப் பொதுமேலாளா் கோதண்டராமன், தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், திருவையாறு செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.