நாகப்பட்டினம்: நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.
நாகை, புத்தூா் பகுதியை சோ்ந்த சிவகுமாா் மகன் ஷெரின்ராஜ். இவா் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறாா். இவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த விக்டர்ராஜ் மகள் சூா்யாவுக்கும் நாகை புனித லூா்து மாதா தேவாலயத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. பின்னா், மணமக்கள் ஷெரின்ராஜ்- சூா்யா ஆகியோா் மணக்கோலத்தில் நாகை மாவட்ட ஆட்சியரகம் வந்து, ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் ரூ. 50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினா். அந்த உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மணமக்களை பாராட்டி, வாழ்த்தினாா்.