கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினசரி தொற்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும் அதே வேளையில் அதிகளவில் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும் பங்காக இருந்து வருகிறது.
தொடக்கத்தில் வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் இருந்து வந்தது. அந்த சமயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை தொற்று பரவல் குறைவாக இருந்தது. இதனால் இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.எனவே இங்குள்ள ஆக்சிஜன் சேமிப்பு தொட்டியில் சேமித்து வைக்கப்படும் ஆக்சிஜன் விரைவாக தீர்ந்து போய்விடும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் ஆலையில் இருந்து லாரி மூலம் நேற்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த லாரியில் இருந்து 3,300 லிட்டர் ஆக்சிஜன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தொட்டியில் நிரப்பப்பட்டது.
ஏற்கனவே கடந்த 13-ந்தேதி 1000 லிட்டர் ஆக்சிஜன் இருப்பு இருந்த நிலையில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.