தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி 8-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாதிப்பால் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப் படுபவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் உள்ள படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்டத்தில் வைரஸ் பரவல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.
இதுவரை கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 694 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 38 ஆயிரத்து 62 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 32 ஆயிரத்து 890 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
தற்போது 3,874 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 899 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கட்டுப்பாட்டு மண்டலங்கள் 62 இடங்கள் உள்ளன.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.