ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மயிலாடுதுறையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.ஈஇந்நிலையில், நேற்று காலை முதலே காந்திஜி ரோடு கண்ணார தெரு பட்டமங்களத் தெரு பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மொபட், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் அதிகளவில் சென்றன.
முழு ஊரடங்கு நேரத்திலும் அதிக வாகனங்கள் சென்று வந்தபடியே இருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டுமே போலீசார் நின்று வாகன ஓட்டிகளை அத்தியாவசிய தேவைக்கு தவிர வாகனங்களில் வரவேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். ஆனால் மற்ற பகுதிகளில் போலீசார் இல்லாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சென்று வந்தனர்.
வாகனங்கள் அணிவகுத்து வரிசையில் நின்றன. இதனால் மயிலாடுதுறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்களில் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது
இதுபோன்ற நிலை வராமலிருக்க முக்கிய பகுதிகளில் கூடுதலாக போலீசாரை பணி செய்ய செய்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் முழு ஊரடங்கு அமலில் இருக்கும், தொற்று பரவுவது தடுக்கப்படும், இதற்கு காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.