0 0
Read Time:4 Minute, 50 Second

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதிவரை பொது முடக்கத்தை அறிவித்து சமூக தொற்று பரவாமல் பாதுகாத்துவருகிறது.

இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்குச் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கிவருகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டுவரும் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, கரோனா தலைமை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், பணிக்கு வந்து செல்லும் வகையில் சிதம்பரத்தில் இருந்து கடலூர், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பேருந்துகளை நம்பி மருத்துவர்களும் செவிலியர்களும் பணிக்கு வந்துசெல்கிறார்கள். இந்த நிலையில்  செவ்வாய்க்கிழமை அன்று கடலூரிலிருந்து  சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பணிக்கு வந்த செவிலியர்கள் திவ்யா, ரேகா, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்குப்  பணிக்கு வந்த செவிலியர் ஜெயந்தி ஆகியோர் கடலூரிலிருந்து புறப்படும் பேருந்தில் பணிக்கு வந்துள்ளார்கள். 

அப்போது இவர்கள்  பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம், “எங்களுக்கு கரோனா வார்டு பணி இரவு 7.30 மணிக்கு முடியும். எனவே எங்களை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். நாங்கள் வந்துவிடுகிறோம். வேற பேருந்து இல்லை” என கூறியதாக கூறுகின்றனர். பின்னர் செவிலியர்கள் மாலை பணி முடிந்து சரியாக 7.30 மணிக்கு மருத்துவக் கல்லூரியில் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து பார்த்தபோது பேருந்து இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விசாரித்தபோது, பேருந்து 7.10 மணிக்கு சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 3 செவிலியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு 8 மணியிலிருந்து 10 மணிவரை அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத பேருந்து நிலையத்தில் கண்ணீர் மல்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் வருவாய்துறை அலுவலர்களிடம் பேசியுள்ளனர். சரியான பதில் இல்லை என கண்ணீருடன் கூறினர். இதுகுறித்த தகவலை சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக்கிற்கு தெரிவித்தோம். அவர் உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை வரவழைத்து, 3 பேரையும் கடலூருக்கு கொண்டு விடுவதற்கான ஏற்பாட்டை செய்தார். இந்த தகவலைக் கேட்ட செவிலியர்களுக்கு சற்று முகமலர்ச்சி ஏற்பட்டது. பின்னர் வாகனம் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கண்ணீர் மல்க  இதற்கு உதவிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர் சுப்பு, சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடலூருக்குச் சென்றனர். இதில் செவிலியர் ஜெயந்திக்கு 7 மாதத்தில் குழந்தை உள்ளது. கணவரும் 108 அவசர ஊர்தியில் இரவு பணிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து கடலூர் பேருந்து டெப்போ மேலாளரிடம் கேட்டபோது, “இனிமேல் அவர்கள் கூறும் நேரத்தில் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %