மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார்.ஒன்றிய ஆணையர் தியாகராஜன், பிடிஓ அருண் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தை பொருத்தவரையில் கோவிட் சிறப்பு சிகிச்சை மையம் புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும், உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், மிதமான தொற்று, கூடுதலாக தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மயிலாடுதுறை சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் மையத்திலேயே உரிய பரிசோதனைகள் செய்து கொண்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை பெறலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலை.