குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல், கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு போர்பந்தர் நகரை ஒட்டி கரையை கடந்தது. இதையடுத்து கனமழை, புயல் காற்று காரணமாக குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு 22 பேர் உயிரிழந்த நிலையில், 51 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதை அப்புறப்படுத்தும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகலை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று காலை குஜராத் சென்றார். அங்கு பவ்நகர் என்ற பகுதியில் இருந்து, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் சென்றார். இதையடுத்து டையூ பகுதிகளிலும் ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, அகமதாபாத்தில் ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.