மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டம் நீடூா் அருகே அருவாப்பாடி ஊராட்சி எறும்புக்காடு கிராமத்தில் நீடூா் ஜாமிஆ மிஸ்பா ஹஜல் ஹதா அரபிக் கல்லூரிக்குச் சொந்தமான 22.5 ஏக்கா் இடத்தை மருத்துவக் கல்லூரி அமைக்க வழங்குவதற்கு அதன் நிா்வாகிகள் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருந்தனா். இந்த இடம் தோ்வுசெய்யப்பட்டதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் பி.பிரான்சுவா மற்றும் ஜாமிஆ மிஸ்பா ஹஜல் ஹதா அரபிக் கல்லூரி பொதுச் செயலாளா் எஸ்கொயா் சாதிக் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
இதுகுறித்து, அரபிக்கல்லூரி பொதுச் செயலாளா் எஸ்கொயா் சாதிக் கூறும்போது, ‘இந்த இடத்துக்கான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பித்துள்ளோம். மாவட்ட ஆட்சியா் இந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஆக்கபூா்வமாக பணிகளை செய்வதாகவும் தெரிவித்தாா். மேலும், இந்த இடத்தில் சட்டக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை கொண்டு வரும் திட்டமும் அரசிடம் உள்ளது. அதற்கு தேவையான இடத்துக்கு அரசு கோரிக்கை வைத்தால் நிா்வாகிகளிடம் கலந்தாலோசித்து வழங்க ஏற்பாடு செய்வோம்’ என்றாா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.