கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து விட்டது. இதில் 33 ஆயிரத்து 550 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 528 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ளஆஸ்பத்திரிகளிலும், 953 பேர் பிற மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருப்பினும் நாளுக்கு நாள் சுமார் 700 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், ஆஸ்பத்திரிகளில் சாதாரண படுக்கைகள் கூட நோயாளிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மொத்தம் கொரோனா நோயாளிகளுக்காக 350 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 168 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையது.
ஆனால் ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிலேயே வெறும் தரையில் கொரோனா நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போதும் அதே நிலை தான் தொடருகிறது.
அதாவது ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் அவசர சிகிச்சை வார்டு முன்புள்ள வளாகத்தில் கூடுதலாக தற்போது ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு திறந்த வெளியிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சர்வசாதாரணமாக உலாவருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 350 படுக்கை வசதிகள் உள்ளது. இதில், 168 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் கூடுதலாக 18 படுக்கைகள் தயார் செய்யப்பட்டது. அதுவும் நிரம்பியதால் சிகிச்சைக்காக வருவோரை வெளியில் அமர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கூடுதலாக சுமார் 160 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் சாதாரண படுக்கை வசதி ஒதுக்குவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என்றார்.