தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 10-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.பொதுமக்கள் தேவையின்றி மார்க்கெட்டுகளில் கூடுவதை தவிர்க்க காய்கறி கடைகளை விசாலமான அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கடலூரில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது.
அதாவது கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், புதுப்பாளையம் பகுதி காய்கறி மார்க்கெட் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் கடலூர் பஸ் நிலையத்திற்கும், கடலூர் முதுநகர் பக்தவச்சலம் காய்கறி மார்க்கெட் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகிலும் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த 3 இடங்களில் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இங்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று காய்கறிகளை வாங்கிச்செல்ல வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் பான்பரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் வைத்திருந்தவர்கள், முன்கூட்டியே இடம் பிடிப்பதற்காக கடலூர் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சாக்குப் பைகளை விரித்து வைத்துள்ளனர்.
நிருபர்: அருள்மணி, கடலூர்.