கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் காணப்படும். கால் நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் முதலைகளை தடுப்பதற்கு இரும்புகூண்டுகள் வைத்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிதம்பரம் பகுதியில் பெய்தகனமழை காரணமாக வெள்ளியங்கால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து காணபட்ட நிலையில் இந்த ஓடைக்குள் இருந்த ராட்சத முதலை ஒன்று சிவாயம் கிராமத்திற்குள் புகுந்தது.வாயைபிளந்தபடி சீற்றத்துடன் காணப்பட்ட அந்த முதலை குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வன அதிகாரி அஜிதா தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.
நீணட நேரமாக வழியை அடைத்து படுத்துக் கிடந்த அந்த ராட்சத முதலையை நகரவைக்க ஏணியை வைத்து சீண்டினர் பலனில்லை. இறுதியாக மெல்லிய குச்சியால் அதன் கால் இடுக்கில் குத்தி கிச்சு கிச்சு மூட்டினர் இதனால் சுறுசுறுப்புஅடைந்து முதலை நகர ஆரம்பித்தது.
பின்னர் மாட்டிற்கு வாலை பிடித்து திருக்கிவிடுவது போல முதலையில் வால்பகுதியை தூக்கி தட்டிவிட்டனர், உடனடியாக ஆவேசமாக வாயை பிளந்தபடி சென்ற முதலையின் கண்களில் ஈரத்துணியை போர்த்தி அதன் வாயை கட்டி, அதன் கால்களை பிடித்து இரும்பு ஏணியுடன் இருக்கமாக கட்டி மடக்கிப்பிடித்தனர்.
14 அடி நீளமும் 400 கிலோ எடையும் கொண்ட அந்த ராட்சத முதலையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி வக்காரமாரி ஏரியில் கொண்டு சென்று விடப்பட்டது. தற்போதுவரை 50 சிறிய மற்றும் பெரிய முதலைகள் அந்த ஏரியில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் ஓடைகள் வழியாக முதலைகள் எளிதாக தப்பி வந்து ஊருக்குள் புகுந்துவிடுவதாக கூறப்படுகின்றது.அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் முதலைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகை வைத்து பொதுமக்களை உஷார்படுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.